Sanathkumar C.D.

5 min

நானும் திரு கே. பாலசந்தரும் . . . . .

Updated: Jun 26, 2020

இவரின் முதல் படமான நீர்க்குமிழியே என்னை பாதித்து விட்டது. அதற்கடுத்த நவக்கிரகமும் அப்படியே. முற்றிலும் ஒரு புதிய சிந்தனையாளர் தமிழ் பட உலகுக்கு வந்து விட்டார் என்பதையே அந்த ஆரம்பப்படங்களே தமிழ்பட ரசிகர்களுக்கு உணர்த்தியது. அதற்கடுத்து வந்த சர்வர் சுந்தரம்¸ மேஜர் சந்திரகாந்த் போன்ற படங்கள் அவரை வெகு விரைவில் ஒரு உயரமான இடத்தில் தமிழ்ப் பட உலகம் வைத்து விட்டது. மேஜர் சந்திரகாந்த் போன்ற கதையமைப்பை கொண்ட ஒன்றை¸ கதாநாயகி இல்லாமல் ஒரு படமாக கொடுக்க முடியும் என்பதை எவ்வளவு இயக்குநர்களால் செய்ய முடியும் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி¸ குறிப்பாக இன்றைய பட உலகில். கே.பியின் படங்கள் கதாநாயகனையோ¸ கதாநாயகியை வைத்தோ அமைந்தது மிகவும் சிலவற்றே. “கே.பாலசந்தரின் படம்” அதுதான் அவருடைய முத்திரை. தன்மேல் அதீதமான முறையில் நம்பிக்கை வைதத்திருந்தவர். அவருடைய பல படங்களின் வசனங்கள் நம் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக இருந்தன. சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் பேசும் கஷ்டம் என்பது ஒரு சிறிய கல்¸ அதை கண் முன் வைத்து பார்த்தால் உலகமே தெரியாது¸ அதே கல்லை சற்று தூரத்தில் வைத்து பார்த்தால் கஷ்டம் என்பது நம் வாழ்க்கையில் ஒரு சிறிய நிகழ்ச்சிதான்”என்பனவற்றை எமது பள்ளியில் மாணவர்களுக்கு போட்டுக்காட்டி அவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்க பேருதவியாக இருந்தது.

தமிழ்பப் பட உலகில் ரசிகர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி நடித்த படங்களுக்கு தேடித் தேடிச் சென்ற ரசித்த காலம் அது. நடிகர்களுக்காகத்தான் பட உலகம் என்றிருந்த நிலை. நடிகர்களின் முகங்களை பெரிதளவில் போஸ்டரில் போட்டால்தான் படம் ஓடும்¸ பணம் பண்ண முடியும். நடிகர்களுக்கப்பால் தமிழ் பட ரசிகர்கள் வேறு யாரையும் பார்க்க தயாராக இல்லை. இந்த காலக்கட்டத்தில்தான் கே.பாலசந்தர் தமிழ்ப்பட உலகில் நுழைந்தார். ஏந்த ஒரு பெரிய நடிகரையும் வைத்து இவர் படம் பண்ணவில்லை. அதைப்போல எண்ணமும் இவரிடம் இல்லை. சண்டைக் காட்சிகளோ¸ அபத்தமான நகைச்சுவையோ¸ தேவையற்ற பாடல் காட்சிகளோ என்ற எந்த ஒரு மசாலும் இவர் படங்களில் இல்லை. ஒரு நல்ல படம் செய்ய தன் எண்ணமும்¸ உழைப்பும்¸ நம்பிக்கையும் மட்டுமே போதும் என எண்ணினார். இயக்குநர் யார் எனக் கண்டறிந்து இவர் படங்களைக் காண மக்கள் தியேட்டருக்கு செல்வதை ஆரம்பித்தவர் கே.பி.

அளவாக பேசுவார். ஆழமாக சிந்திப்பார். தளங்களில் கடுமையாக உழைப்பார். நடிக்கவே தெரியாதவர்களைக்கூட நல்ல முறையில் நடிக்குமாறு செய்தார். பழம் பெரும் நடிகர்களை வைத்து படம் எடுப்பதை விட¸ புது முகங்களுக்கு ஒரு நல்லதொரு வாய்ப்பினை கொடுத்து¸ தன் எண்ணங்களை இந்திய உலகிற்கு அறியச் செய்தார். இதைப்போல ஒரு சவாலை தன் வாழ்நாள் இதுதான் நம் எல்லோரும் அவரைப் பார்த்து வியக்க வைத்த ஒன்று. அவருடைய பல படங்கள் ஒரு முறை பார்த்தால் அவ்வளவாக புரியாது …. பல முறை பார்த்தால்தான் அவருடைய சரியான நோக்கம் புரியும். இன்றும் கூட அபூர்வ ராகங்கள் படத்தை பார்த்தால் ஏதாவது ஒரு புதிய செய்தி கிடைக்கும். அவருடைய அவள் ஒரு தொடர்கதை என்ற ஒரு படத்தை வைத்து 10 படங்கள் செய்யலாம். இதைப்போல பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவருடைய படங்களை பாhர்த்து விட்டு பல நாட்கள் அதைப் பற்றியே பெசிக் கொண்டிருப்போம். அவள் ஒரு தொடர் கதையின் கிடைமாக்ஸ் போல வேறு எந்த இயக்குநரும் செய்ய முடியாது.

எனக்கு மிகவும் நெருங்கிய டாக்டர் முனாப் அகமது “நானும் என்னுடைய மற்ற 4 நாண்பர்களும் மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருந்த வேளை அது. நாங்கள் நல்ல முறையில் படித்து வந்தோம். அந்த சமயத்தில் கே.பி.சார் படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. போஸ்டரை பார்த்தவுடனேயே இவரது படத்தை முதல் நாளே போய் பார்த்து விடுவோம். பிறகு பல நாட்கள் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்போம். இதனால் எங்களது படிப்பும் சிறிதளவு பாதித்து விட்டது. ஆனால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவே இல்லை. அந்த அளவிற்கு இவரது படங்கள் எங்களை பாதித்து விட்டது”.

இதைப்போல குறைந்தது என்னால் பாலசந்தரைப் பற்றி ஒரு வருடம் முழுதும் பேசிக்கொண்டே இருப்பேன்.

இவர் படம் எடுப்பதை நிறுத்தியவுடன் நானும் என் நண்பர்களும்¸ பாலசந்தரோடு தமிழ்ப்பட சகாப்தம் முடிந்து விட்டது என்று முடிவெடுத்து விட்டோம். 2000களில் எனக்கு திரு பாலசந்தரோடு ஒரு நெருக்கம் மற்றும் நட்பு ஏற்பட்டது. அதுவரை கடிதங்கள் எழுதிக்கொண்டேயிருப்பேன் அவருக்கு. ஒரு நாள் அவர் என்னை தன் வீட்டிற்கு வரச்சொன்னார். அந்த சந்திப்பை எங்கள் குடும்ப நண்பர்களான திரு சுரேஷ் கிருஷ்ணமூர்த்தியும் அவருடைய மனைவி மற்றும் கர்நாடக சங்கீத பாடகி திருமதி அனுராதா கிருஷ்ணமூர்த்தியும் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நேரம் அவருக்கு இரண்டாவது தடவையாக மாரடைப்பு ஏற்பட்டு மாடியில் ஓய்வு பெற்றிருந்த வேளை. எனக்காக அவர் கீழே இறங்கி வந்தார். அந்நாள் என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள் என்று இன்றளவும் எண்ணி மகிழ்கிறேன்.

அன்று முதல் எப்போது சென்னை சென்றாலும் அவர் வீட்டிற்கு சென்று; அவரிடம் கொஞ்ச நேரம் பேசி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். எப்போதாவது நான் சில சமயம் செல்லாத நிலையில்¸ தன்னுடைய செயலாளர் திரு மோகன் அவர்களிடம்¸ ஏன் சனத் குமார் சில நாட்களாக வரவில்லை எனக்கேட்கும் அளவிற்கு எங்களது அந்த அழகான¸ ஆழமான நட்பு நீடித்தது. அப்படி அவர் என்னைப் பற்றி கேட்கும் நிலையில் எந்த வேலையிருந்தாலும் அப்படியே போட்டு விட்டு சென்னை சென்று கே.பி. சாரை பார்த்து பேசி வருவேன். அதை ஒரு பெரிய மகிழ்ச்சியான தருமாணமாகவும்¸ பெருமையாகவும் அடைவேன். அவருடைய படங்களை பல முறை பார்த்து அலசியிருக்கிறேன். மைசூரில் நானும் அவர் மட்டுமே ஒரு தனியறையில் சில மணி நேரங்களை கழிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். சுரிதா எப்படி தானாகவே வந்து சில காட்சிகளை நடித்து காட்டினார் என்பனவற்றையெல்லாம் விளக்கினார். நான்கு சுவர்கள் என்ற படத்தை பற்றி குறிப்பிட்டு¸ இதை ஏன் எடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு மிகப் பெரிதாக சிரித்து விட்டு¸ அதைப் பார்த்தீர்களா ? சில சமயம் இதைப்போல நடப்பதும் உண்டு என்று சொன்னார். என்றுமே மறக்க முடியாத தருணங்கள் அவை.

அவருடைய சகானா சீரியல் ஒரு பிரமாதமான ஒன்று. சினிமா எடுப்பதை போல இதற்காக இவர் உழைத்திருந்தார். சிந்து பைரவி எவ்வளவு அழகாக இருந்ததோ¸ அதே பொல இந்த சகானா சீரியலும் இருந்தது. இசைக்கு மிகவும் பிரமாதமாக வடிவம் கொடுத்திருந்தார்.

என்னுடைய கிருஷ்ணகிரி பள்ளிக்கூடத்தில்; குழந்தைகளுக்கு பாடங்களை டிஜிட்டல் முறையில் சினிமா பார்ப்பதைப் போன்றே பாடங்களை சொல்லிக் கொடுக்க 100 குழந்தைகள் அமரக் கூடிய ஒரு தியேட்டர் ஒன்றினை கட்டி அதனை கே.பி.சார்தான் திறக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்து¸ எங்கள் ஊருக்கு வந்து¸ தியேட்டரை திறந்து வைத்து¸ மேடையில் பொது மக்களிடம் குழந்ததைகளிடமும் பேசி¸ எங்களோடு மதிய மற்றும் இரவு உணவருந்தி¸ பலவற்றை பேசி மகிழ்வித்தார். என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் அதிக நேரம் விசாரித்து தெரிந்து கொண்டார். துன்னுடைய இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி வளாகத்ததை மிகவும் அழகாக¸ நேர்த்தியாக அழகு படுத்தியதை நினைவு கூர்ந்தார். அன்று அவர் மேடையில் அமர்ந்தபோது¸ அவருடன் எமது பள்ளியின் முன்னாள் மாணவர்கள்தான் அமர்ந்து முழு நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொடுத்ததைச் சொல்லி பலமுறை வியந்தார். அது எமது பள்ளியின் சிறப்பம்சம் என்பதை நான் சொன்னபோது தன்னுடைய ஆச்சரியத்தை பெரிய அளவில் தெரிவித்தார். நானும் பள்ளியின் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் மேடைக்கு சென்று அமர்ந்ததே கிடையாது. எல்லாமே குழந்தைகளை வைத்துதான் நிகழ்ச்சிகளை அமைப்போம். இது ஒரு இருபது வருட வழக்கம். நான் கீழே ஒரு மரத்தின் பின்னர் அமர்ந்து நிகழ்ச்சிகளை கவனித்து வந்ததை பார்த்து¸ “ஒரு பத்து ருபாய் செலவு செய்து நூறு ருபாய்க்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் இந்த காலத்தில்¸ இப்படி பெரிய அளவில் பள்ளியை நடத்தி¸ அழகாக மேடை போட்டு¸ எதுவுமே காட்டிக்கொள்ளாமல் மேடைக்கு கீழே ஓர் மூலையில் அமர்ந்து கவனித்து வரும் இந்த சனத் குமாரை நினைக்கும் போது¸ மனது கனமாகிறது” என்று சொல்;லியது¸ என்னை மேலும் பணிய வைத்து விட்டது.

அதன் பின் பிராஷாந்தி என்ற ஒரு தியேட்டரை திறந்து வைத்ததார். அந்த விழாவில்¸ அந்த அரங்கத்தில் கே.பி.சாரின் 12 படங்கள் மற்றும் சகானா சீரியலிலிருந்து ஒரு 45 நிமிடம் ஓடும் அளவிற்கு ஒரு டாக்குமென்டை தயாரித்து அவருக்கு போட்டுக் காட்டினேன். அவரின் படைப்பை நான் சுருக்கி¸ அவர் அருகில் அமர்ந்து ரசிக்கும் பாக்கியத்தை நான் அன்று பெற்றேன். அந்த சமயத்தில் பல இடங்களில் என் கைகளை இருகப் பற்றி தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். இதைப்போல சந்தர்ப்பங்கள் ஒரு சிலருக்குத்தான் அமையும். அன்று எனக்கு அமைந்தது. மற்றும் அன்றிரவு எங்களோடு தங்கி மறு நாள் காலைதான் சென்னைக்கு சென்றார். பம்பாயில் வசிக்கும் இவருடைய இரண்டாவது மகன் வீட்டைத்தவிர வேறு எங்கும் சென்று தங்காதவர் என்பது பிறகு தெரிய வந்தபின் பெரிதளவு பெருமை கொண்டேன்.

ஜுலை 9ம் தேதி கே.பி.சாருடைய பிறந்த நாள். பல வருடங்கள் இந்நாளில் இவரின் வீட்டிற்கு நானும் என் குடும்பத்தாரும் சென்று இவரிடம் வாழ்த்து பெறுவதை பெருமையாகக் கொண்டிருந்தேன். ஒரு முறை என்னைப் பார்த்து “என்னிடம் ஏன் இவ்வளவு அன்பு வைத்திருக்கீறீர்கள்¸ பல சமயங்களில் நான் நெகிழ்ந்து போகிறேன்¸ இதற்கும் ஏதாவது காரணம் உண்டா?” எனக் கேட்டார். நீங்கள் ஒரு மகா மகா பெரிய கலைஞர்¸ 20 வருடங்களுக்கு முன்னரே ஒன்றை தீர்மானிக்கும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது¸ ஏறக்குறைய என் எண்ண ஓட்டமும் அப்படித்தான்¸ உங்களுடைய இந்த ஆற்றல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது என்று சொல்லியபோது எனது கைகளை பிடித்து குலுக்கி நன்றி சொன்னார்.

அவரது மகன் திரு கைலாஸம் மறைந்தது கே.பி.சாருடைய உடல் மற்றும் மன நிலையை மிகவும் பாதித்து விட்டது. திரு கைலாஸம் மறைந்த 5வது நாள் சென்னை சென்று அவரைச் சந்தித்தேன். மிக மிக சோர்வாக காணப்பட்டார். தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்து என்னுடன் சோகத்தை பகிர்ந்து கொண்டார். குழந்தைகள் இருக்கும்போதே பெரியவர்கள் மறைந்து விட வேண்டும்¸ பெரியவர்கள் முன் குழந்தைகள் இறக்கக்கூடாது என்று அவர் சொல்லி வருத்தப்பட்டபோது¸ மனது மிகவும் கனத்து விட்டது. அதற்கடுத்த நாட்களில் வெகு வேகமாக கே.பி. சாருடைய உடல் நலமும் பாதித்து விட்டது. மகன் மறைந்த 110 நாட்களில் அந்த ஒரு பெரிய சிந்தனாவாதி மறைந்து போனார். இறக்கும்போது அவர் 84ஐ கடந்து 85ல் இருந்தார்.

நான் சக்கர நாற்காலியில் அமர்ந்து என்னுடைய வேலைகளை கவனிப்பவன். எப்படி கே.பி.சாரின் மறைவஞ்சலிக்கு செல்வது என மிகவும் குழம்பிப்போயிருந்தேன். என் மனம் எப்படியாவது அவரை கடைசி ஒரு முறை பார்த்து விட வேண்டும் என துடித்தது. அந்த கூட்டத்தில் சக்கர நாற்காலியில் அவரது வீட்டிற்கு செல்வது என்பது இயலாத காரியம். இருந்தாலும் ஒரு பிடிவாதத்துடன் சென்னைக்கு குடும்பத்துடன் சென்று விட்டேன். நான் சென்னை அருகே செல்ல செல்ல அவரது உடல் மைலாப்பூர் இல்லத்திலிருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு ஊர்வலம் தொடங்கி விட்டது.

இந்த தருணத்தில் திரு கே.பி.சாருடைய செயலாளர் மோகனும்¸ டிரைவர் கோவிந்தராஜனும் மிகவும் உதவி செய்தார்கள். ஓவ்வொரு இடத்திலிருந்தும் ஊர்வலம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற தகவல் எனக்கு வந்து கொண்டேந்தயிருந்தது. ஒரு வழியாக கே.பி.சாரின் ஊர்வலம் பெசன்ட் நகர் மயானத்தை அடையுமன் நான் அங்கே சென்று விட்டேன். கட்டுக்கடங்காத கூட்டம். என்னைப்போன்றவர்கள் கட்டாயம உள்ளே செல்ல முடியாத நிலை. அவரின் முகத்தை பார்க்க முடியுமா என குழப்பத்தில் இருந்தேன். கே.பி.சாரின் யுனிட்டை சேர்ந்த பாபு என்பவர் எனக்காக ஒரு டீமை அமைத்து என்னை மின் மயான மேடையின் அருகே அமர்த்தி விட்டார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் கே.பி.சாரின் உடல் உள்ளே கொண்டு வரப்பட்டு¸ அங்கே வைக்கப்பட்டு கடைசிசடங்குகள் நடைபெற்றன. ஏனக்கு ஒரு 5 அடி தூரத்தில்தான் அவரைப் படுக்க வைத்தனர். அவரை நான் முழுவதுமாக பார்க்க முடிந்தது. அவர் எனது பள்ளிக்கு வருகை தந்த போது என்ன உடையில் இருந்தாரோ¸ அதே உடையில் மீண்டும் அவரை அங்கு பார்த்தேன். அவரது முகம் என் பக்கம் திரும்பியிருந்தது. “எப்படி இவ்வளவு சிரமத்திற்கு நடுவே இங்கு வந்தீர்கள்” என அவர் என்னை கேட்பது போல இருந்தது. அதற்கு நான் கொடுத்து வைத்தவன் என மனதார அவரிடம் நான் சொன்னேன்.

பிறகு அவரை உள்ளே அழைத்துச்சென்று விட்டார்கள். நானும் வெளியே வந்து விட்டேன். கே.பி.சார் மறையவில்லை. அவரது படங்கள் மூலமும்¸ அவரது அறிமுகங்கள் மூலமும்¸ காமெரா மூலமும்¸ வசனங்கள் மூலமும்¸ இசையின் மூலமும் எப்போதும் வாழ்வார். தமிழ்ப்பட உலகில் அவா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் வானில் உள்ள ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் ஒருவர் அல்ல¸ அவர் வானில் உள்ள முழு நிலவு. வானத்தில் நிலவு வானில் என்றும் இருக்கும்¸ அதேபோல பாலசந்தரும் நம் நினைவில் என்றுமே இருப்பார்¸ நம் நினைவிருக்கும் வரை.

0